

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் அங்காடி (33) நேற்று முன் தினம் இரவு தனது நண்பர்கள் 9 பேருடன் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கோயிலுக்கு வேனில் சென்றார்.
அதிகாலை 1.30 மணியளவில் எல்லாப்பூரை அடுத்துள்ள பாலகராகிராஸ் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது வேன் வேகமாக மோதியது. இதனால் ஏற்பட்ட கோர விபத்தில் சஞ்சீவ் அங்காடி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் ஹுப்ளியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எல்லாப்பூர் போலீஸார், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பிஎன்எஸ் சட்ட பிரிவுகள் 281 (பொதுச் சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்), 125 (2) (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) மற்றும் 106 (1) (கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.