

அமராவதி: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலகலூருபேட்டா மண்டலம், வேலூரு கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில், நேற்று முன்தினம் பாபட்லா மாவட்டம், கொண்டமஞ்சுலூரு கிராமத்தில் ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றனர்.
விழாவில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு, நள்ளிரவில் அதே ஆட்டோவில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, சிலகலூருபேட்டா அட்டரோடு எனும் இடத்தில் நேற்று அதிகாலை ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது ஆட்டோவில் பயணம் செய்த 15 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 11 பேரை குண்டூர், சிலகலூருபேட்டா ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 8 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சிலகலூரு பேட்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.