

மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பைஸ்னாப் நகர் தொகுதி வேட்பாளர் சந்தானா சர்காரை ஆதரித்து பேசினார். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் (எஸ்ஐஆர்) போது வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணியில் அமர்த்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மால்டா மாவட்டம் கலியாசக் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
அங்கு நேற்றுமுன்தினம் குவிந்திருந்த போராட்டக்காரர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்த 3 பெண் அதிகாரிகள் உட்பட 7 அதிகாரிகளை சிறை வைத்தனர். 9 மணி நேரத்துக்குப்பிறகு அங்கு போலீஸார் சென்று, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி சிறைவைக்கப்பட்ட அதிகாரிகளை நேற்று அதிகாலை 1 மணியளவில் மீட்டனர்.
உச்ச நீதிமன்றம் கண்டனம்: இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த தலைமையிலான அமர்வு நேற்று கூறியதாவது: மாவட்ட நீதிபதிகளை மிரட்டியது திட்டமி்ட்டு அரங்கேற்றிய செயல்.
மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை. மேற்கு வங்கத்தில் அனைவரும் அரசியல் மொழியில் பேசுகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கயவர்கள் யார் என்பது தெரியாது என்று நினைக்கிறீர்களா? நள்ளிரவு 2 மணி வரை இச்சம்பவத்தை கண்காணித்தோம்.
இந்த விவகாரத்தைச் சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பான விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கும் அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்கும் வகையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், டிஜிபி, மால்டா மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி உள்ளிட்டோர் ஆன்லைனில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து சகர்திகி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘மால்டாவில் நீதித்துறை அதிகாரிகளை சிறைபிடித்தவர்கள் யார் என எனக்குத் தெரியாது. இச்சம்பவம் குறித்து எனக்கும் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.
அதிகாரம், சட்டம் ஒழுங்கு அனைத்தையும் என்னிடம் இருந்து மத்திய அரசு எடுத்துவிட்டது. மால்டா சம்பவம் சதி திட்டத்தை தயாரித்தது அமைச்சர் அமித் ஷா. மேற்குவங்கத்தில் தோல்வி ஏற்படும் என்பதால், தேர்தலை ரத்து செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக விரும்புகிறது’’ என்றார். இதற்கிடையில் என்ஐஏ விசாரிக்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.