

அனந்தகிரி: ஆந்திராவில் லாரியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி 7 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், அனந்தகிரி மண்டலம், பினகோட்டா பகுதியில் சாலை பணி நடைபெறுகிறது. இதற்காக லாரிகளில் ஜல்லி கற்கள் கொண்டு வரப்படுகிறது. ஒரு லாரியில் டீசல் தீர்ந்து விட்டதால் அதன் ஓட்டுநர் பெட்ரோல் நிலையத்தில் இருந்து டீசல் வாங்கி வந்தார். அந்த டீசலை, அவர் லாரியில் நிரப்பி கொண்டிருந்தார்.
கல் குவாரிக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் லாரியில் இருந்தன. டீசல் நிரப்பியபோது எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் லாரி, அதன் அருகில் நின்றிருந்த ஆட்டோ கடுமையாக சேதமடைந்தன.
சாலை பணியில் ஈடுபட்டிருந்த மணி, நாராயணா, பவன்குமார் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியை சுனிதாவும் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.