

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின், வரதட்சணை கொடுமையால் கடந்த காலங்களில் கேரளாவில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் வரதட்சணைக் கலாச்சாரத்துக்கு எதிராக மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். வரதட்சணைக்கு எதிராக ஆளுநர் ஒருவர் உண்ணாவிரதம் இருப்பது, இந்தியாவிலேயே இது முதல் முறையாகும். காலை 8 மணிக்கு தொடங்கிய தனது உண்ணாவிரதத்தை மாலை 6 மணிக்கு காந்தி பவனில் ஆளுநர் ஆரிப் முகமது கான் முடித்துக் கொண்டார்.
கேரள ஆளுநரின் உண்ணா விரதத்துக்கு காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கேரள காங் கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறும்போது, ‘‘கேரள பெண்களின் பாது காப்பை முதல்வர் பினராயி தலைமையிலான அரசு உறுதி செய்யவில்லை என்பதையே ஆளுநரின் உண்ணாவிரதம் நமக்கு உணர்த்துகிறது. ஒரு சமூக பிரச்சினைக்காக ஒரு ஆளுநரே போராட்டம் நடத்தும் அளவுக்கு கேரளாவில் சூழல் உள்ளது’’ என்றார்.