வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 4-ம் தவணை; தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வழங்கியது மத்திய அரசு: நடப்பு நிதியாண்டில் ரூ.39,484 கோடி வழங்கப்பட்டுள்ளது

வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 4-ம் தவணை; தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வழங்கியது மத்திய அரசு: நடப்பு நிதியாண்டில் ரூ.39,484 கோடி வழங்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17 மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் நான்காம் தவணையாக ரூ.9,871 கோடியை மத்திய அரசுவழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.39,484 கோடி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாயைக் காட்டிலும் செலவினங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிக்கநிதி வழங்க மத்திய அரசுக்கு 15வது நிதிக் குழு பரிந்துரைத்தது.

அதாவது 2021-22 நிதி ஆண்டில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான வருவாய் பகிர்வுக்குப் பின்னும் வருவாய் பற்றாக்குறைக்கு உள்ளாகும் 17 மாநிலங்களுக்கு மானியமாக ரூ.1,18,452 கோடி வழங்க 15வது நிதிக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அரசியல் சாசன சட்டத்தின்275வது பிரிவின் கீழ், வருவாய்பற்றாக்குறைக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு இந்த மானியத்தை 12 மாத தவணைகளாக வழங்க நிதிக் குழு பரிந்துரைத்தது.

தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறை மானியம் பெற தகுதியுள்ள மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த மாநிலங்களின் வருவாய் மதிப்பீடுக்கும் அவற்றின் செலவுக்கும் இடையிலான இடைவெளிஅடிப்படையில் மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானிய அளவை நிதிக் குழு முடிவு செய்து நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

நிதிக்குழுவின் இந்தப் பரிந்துரையின்படி 4-வது தவணையாக இந்த மாதம் 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடி நிதியைப் பகிர்ந்துவழங்கியுள்ளது நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை. இதுவரை வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக மொத்த ஒதுக்கீட்டில் 33.33 சதவீதம் அதாவது ரூ.39,484 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வழங்கியுள்ள இந்த நிதி கரோனா நெருக்கடி காலத்தில் 17 மாநில அரசுகள் தங்களுக்கான நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொள்ள உதவியாக இருக்கும்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in