

பிரதமர் மோடி மாதந்தோறும் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி நடத்துவதற்கு பதிலாக 'பெட்ரோல் கி பாத்', 'டீசல் கி பாத்' நிகழ்ச்சி நடத்தலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நாட்டின் பொருளாதாரத்தையே பிரதமர் மோடி சிக்கலாக்கும் முயற்சியில் இருக்கிறார். மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சராக இருந்த பபுல் சுப்ரியா நீக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு முடிவு வருவதற்கு முன்பே அவரைக் கழற்றிவிட்டுள்ளனர். இதுவரை பல விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. ஆளுநர் ஜெகதீப் ஜனகரை நீக்கக் கோரி கடிதம் எழுதியும் அதற்கும் பதில் இல்லை.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் தள்ளாடுகிறது. எரிபொருள் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு ஏதும் செய்யாமல் அமைதியாக அமர்ந்துள்ளது.
நம்முடைய பிரதமர் 'மன் கி பாத்' நிகழ்ச்சி நடத்துவதில் பரபரப்பாக இருக்கிறார். அந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு பதிலாக பிரதமர் 'பெட்ரோல் கி பாத்', 'டீசல் கி பாத்', 'தடுப்பூசி கி பாத்' நிகழ்ச்சிகளை நடத்தலாம்”.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.