

அடுத்த ராணுவ தளபதியாக பதவிக்கு வரவுள்ள தல்பிர் சிங் சுஹாக் பற்றி ட்விட்டரில் தரக் குறைவாக கருத்து தெரிவித்து எழுதியதற்காக மத்திய அமைச் சரவையிலிருந்து ஜெனரல் வி.கே. சிங்கை நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் அமரிந்தர் சிங் புதன்கிழமை பேசும்போது கூறியதாவது:
வி.கே.சிங் மீது குறைசொல்வது அவர் அங்கம் வகிக்கும் அரசுதான். இந்நிலையில் புதன்கிழமை காலை அவர் ட்விட்டரில் ராணுவம் பற்றி சொன்ன கருத்து கண்டிக்கத்தக்கது. அடுத்த ராணுவ தளபதியாக வர வுள்ளவர் கிரிமினல் என்றும் அவரின் கீழ் பணியாற்றும் வீரர்கள் கொள்ளையர்கள் என்றும் வி.கே.சிங் விவரித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. இந்த கருத்துகளை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். வி.கே.சிங்கை உடனடியாக அமைச்சர்கள் குழுவிலிருந்து நீக்கவேண்டும்.
13 லட்சம் வீரர்களை உடைய இந்திய ராணுவம் உலகிலேயே 3வது பெரியதாகும் மேலும் கட்டுப் பாடு கொண்டதாகும். பணி மூப்பு அடிப்படையில்தான் ராணுவ தளபதி பதவி உயர்வு தரப்படுகிறது.இவ்வாறு அமரிந்தர் சிங் பேசினார்.
2012ல் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்த தல்பிர் சிங் சுஹாக் மீது அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த வி.கே.சிங் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில் காங்கிரஸின் இந்த கோரிக்கை வந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வி.கே.சிங்கின் நடவடிக்கையை சட்டத்துக்கு புறம்பானது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தான் அப்போது எடுத்த நடவடிக்கை நியாயமானது தான் என இணை அமைச்சரான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்,
அப்பாவிகளை படைப்பிரிவு கொலை செய்து கொள்ளையடிக் கும்போது அதை அந்த அமைப்பின் தலைமையே பாதுகாத்தால் அதற் காக அவரை குறை கூறியே ஆக வேண்டும் என்று ட்விட்டரில் எழுதியுள்ளார் வி.கே.சிங்.