

விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை 42 ஆண்டுகளாக நீடித்த 100 ரூபாய் நில மோசடி வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டம், சீதாபூரைச் சேர்ந்தவர் வீரேந்திர குமார் சிங். இவர் கடந்த 1963-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பரசுராம் என்பவரிடம் இருந்து சீதாபூரில் 0.287 ஹெக்டேர் நிலத்தை ரூ.100-க்கு வாங்கியதாகக் கூறுகிறார்.கடந்த 1979-ம் ஆண்டு ஜூன் 22-ம்தேதி இதே இடத்தை பரசுராமிடம் இருந்து ரூ.700-க்குவாங்கியதாக இந்திரஜித் சிங் பேடி என்பவர் நிலத்துக்கு உரிமை கோரினார்.
இந்த விவகாரம் குறித்து வீரேந்திர குமார் சிங் மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நில ஆவணங்களில் மோசடி செய்திருப்பதாகவும் தனக்கு சொந்தமான இடத்தை இந்திரஜித் பேடி சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வீரேந்திர சிங்கிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்த வீரேந்திர சிங், உயர் நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் உயர் நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வீரேந்திர சிங் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, "இத்தனை ஆண்டுகள் பல்வேறு நீதிமன்றங்களில் வீரேந்திர குமார் சிங் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அவரது போராட்ட குணத்தை பாராட்டுகிறேன். ஆனால் அவர் நிலம் வாங்கியதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. இந்த வழக்கால் நீதிமன்றங்களின் நேரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நீடித்த 100 ரூபாய் நில மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.