

விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷில் குமார் மோடி, சர்பானந்த சோனாவல் உள்ளிட்ட 27 பேர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை தான், எந்த மாறு தலுக்கும் உட்படாமல் மூன்று ஆண்டு களுக்கும் மேலாக இன்று வரை தொடர் கிறது.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் களாக இருந்த சில அமைச்சர்கள் அண்மையில் உயிரிழந்தனர். அதே போல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சி களும் வெளியேறியதால் மத்திய அமைச் சரவையில் பல இலாக்காக்கள் காலியாகின. இந்த இலாக்காக்களை இப் போது உள்ள அமைச்சர்களே கூடுதலாக கவனித்து வருவதால் அவர்களுக் கும் அதிக அளவில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
பிரதமர், அமித் ஷா ஆலோசனை
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதனை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் மோடி கடந்த சில வாரங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எந்தெந்த அமைச்சர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது; எந்த துறைகள் வளர்ச்சித் திட்டங்களில் பின்தங்கி இருக்கிறது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், மாற்றியமைக்கப் படவுள்ள புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய நபர்கள் யார் - யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, காங்கிரஸில் இருந்து அண் மையில் பாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்திய சிந்தியா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவல், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத்தம் முண்டே, உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக மூத்த தலைவர் வருண் காந்தி, மாநிலங்களவை எம்.பி. அனில் ஜெயின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி உள்ளிட்ட 27 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.