

பங்குச் சந்தையில் பரஸ்பர நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தும் சர்வதேச நிறுவனமான பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் எதையும் 2 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது என்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) தடை விதித்துள்ளது.
2020-ம் ஆண்டு 6 நிதித் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் அறிவித்தது. இது செபி விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 6 திட்டங்கள் மூலம் முதலீட்டு நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் கட்டணமாக திரட்டிய ரூ.512 கோடியை திரும்ப செலுத்தவேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.
செபி-யின் இந்த உத்தரவு பல சிறு முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று பங்கு பரிவர்த்தனை ஆலோசனை நிறுவனமான ஃபையர்ஸ் தலைவர் கோபால் காவலி ரெட்டி தெரிவித்துள்ளார்.
டெப்ட் பண்ட் திட்டங்கள்தான் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக கருதப்பட்டது. அதிக லாபத்தை எதிர்பார்க்காத அதேசமயம் சீரான வட்டியை எதிர்நோக்கும் முதலீட்டாளர்கள் பலரது தேர்வும் இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள்தான்.
ஆனால் முதலீடு செய்த நிறுவனங்கள் நஷ்டமடைவது உள்ளிட்ட காரணங்கள் மற்றும் தர நிறுவனங்கள் மதிப்பெண்ணை குறைப்பது போன்றவையும் இம்முதலீட்டுத் திட்டங்களில் முதலீடுசெய்வதை கேள்விக் குறியாக்கி யுள்ளது என்று கவாலி ரெட்டி தெரிவித்துள்ளார்.