

உத்தர பிரதேசத்தின் கங்கை நதியில் பச்சிளம் பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கங்கை நதியில் படகுகள் மூலம் பயணிகள் போக்குவரத்து நடைபெறுகிறது. காஜிபுர் பகுதியில் குல்லு சவுத்ரி என்பவர் படகோட்டியாக பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவர் பணி முடிந்து வீட்டுக்குதிரும்பியபோது நதியில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்ததை பார்த்தார். அவர் பெட்டியை மீட்டு திறந்து பார்த்தார். அதனுள் ஒரு பெண் குழந்தை இருந்தது. அதோடு குழந்தையின் ஜாதகம், துர்க்கை உட்பட பல்வேறு தெய்வங்களின் படங்கள் இருந்தன. ஜாதக குறிப்பின்படி, கடந்த மே 25-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர், 'கங்கை மகள்' என்று எழுதப்பட்டிருந்தது.
சவுத்ரி அந்தக் குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார். "கங்கை தாய் எனக்கு பரிசாக அளித்த குழந்தையை நானே வளர்ப்பேன்" என்று அக்கம்பக்கத்தினரிடம் அவர் கூறி வந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் சவுத்ரியின் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டு மாநில அரசின் ஆஷா ஜோதி மையத்தில் சேர்த்தனர். பின்னர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தை நலமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறும்போது, "காஜிபுர் மாவட்ட கங்கை நதியில்மரப்பெட்டியில் மிதந்து வந்த பெண்குழந்தையை பத்திரமாக மீட்ட படகோட்டிக்கு வாழ்த்துகள். குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும். அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும்" என்றார்.
காஜிபுர் மாவட்ட ஆட்சியர் மங்களபிரசாத் சிங், குழந்தையை நேரில் சென்று பார்த்தார். பின்னர் அவர் குல்லுவின் வீட்டுக்கு சென்று அவரிடம் முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். நிருபர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் உத்தரவின்படி மீட்கப்பட்ட பெண் குழந்தையை அரசே வளர்க்கும். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கவும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.