

கரோனா பரவலை கட்டுப் படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து வரு கிறது. இந்நிலையில் அண்மையில் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி பெற்று அதை தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு விற்றதாக பஞ்சாப் அரசு மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து கொள்முதல் செய்த தடுப்பூசிகளை திரும்ப ஒப்படைக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோவிஷீல்ட் தடுப்பூசியை ரூ.309 விலைக்கு வாங்கி அதை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,560-க்கு பஞ்சாப் மாநில அரசு விற்பனை செய்துள்ளது. ஆனால், மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்கிறார். கேள்வி எழுப்புகிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள நிலைமையை முதலில் அவர் கேள்வி கேட்கட்டும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி எங்கே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். ராஜஸ்தானுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் குப்பையில் கிடக்கின்றன. பஞ்சாபுக்கு தடுப்பூசிகளை வழங்கினால் அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுதான் காங்கிரஸின் கலாச்சாரம்.
பஞ்சாபில் சில மருத்துவ மனைகளுக்கு ரூ.1,000-த்துக்கும், சில மருத்துவமனைகளுக்கு ரூ.1,560-க்கும் விற்பனை செய்துள்ளனர். ரூ.13.25 கோடியில் 4,29,000 கோவிஷீல்ட் டோஸ்களையும், ரூ.4.70 கோடியில் 1,14,190 கோவாக்சின் டோஸ்களையும் பஞ்சாப் அரசு வாங்கியது. ஆனால் அதிக விலைக்கு விற்றுள்ளது. மருந்து நிறுவனங்களிடமிருந்து 50 சதவீத மருந்துகளை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் சில மாநில அரசுகளோ இதில் லாபம் பார்க்க முயல்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.