நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்: 5ஜி சேவை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம்

நடிகை ஜூஹி சாவ்லா | படம் உதவி: ட்விட்டர்.
நடிகை ஜூஹி சாவ்லா | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்காகத் தொடர்ந்த வழக்கு எனத் தள்ளுபடி செய்து, நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது.

5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவில் 5ஜி சேவை கொண்டுவருவதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஹரி ஷங்கர் , நீதிபதி ஜே.ஆர்.மிதா அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சாவ்லா அளித்த பேட்டியில், "வயர்லெஸ் சாதனங்களில் இருந்தும், அலைப்பேசி கோபுரங்களிலிருந்தும் வெளியேறும் கதிர்வீச்சினால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன .

மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அத்தனையும் இந்தக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும். இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும்'' எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜே.ஆர்.மிதா அமர்வில் புதன்கிழமை காணொலி மூலம் விசாரிக்கப்பட்டபோது, ஜூஹி சாவ்லா நடித்த திரைப்படப் பாடல்களை சாவ்லாவின் ரசிகர்கள் ஒலிக்கவிட்டு நீதிபதியை எரிச்சலூட்டினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜே.ஆர்.மிதா உத்தரவு பிறப்பித்தார். அதில், “நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு முற்றிலும் விளம்பரத்துக்கானது. இந்த வழக்கின் விசாரணை குறித்த இணையதள லிங்க்கை சாவ்லா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலமே இது விளம்பரத்துக்கானது எனத் தெரியவருகிறது.

இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் சட்டத்தின் செயல்பாட்டை அவமதித்ததால், அவர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கிறேன். புதன்கிழமை வழக்கு விசாரணையின்போது இடையூறாகப் பாடல்களை ஒலிபரப்பியது யார் எனக் கண்டறிந்து அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட ஜூஹி சாவ்லாவின் வழக்கறிஞர் தீபக் கோட்லா நீதிபதியிடம், ''இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும். எந்த சட்ட அடிப்படையும் இன்றி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி மிதா, “இந்த வழக்கு முடிந்துவிட்டது. வேண்டுமென்றால் சட்ட நிவாரணம் பெறுங்கள். வழக்கறிஞர் தனது எல்லையை உணர்ந்து பேச வேண்டும்” எனக் கண்டித்தார்.

புதன்கிழமை நடந்த விசாரணையின்போது நீதிபதியை எரிச்சலூட்டும்வகையில் பாடல்களை ரசிகர்கள் ஒலிபரப்பினர். இதைக் கேட்ட நீதிபதி, ''பாடல்களை நிறுத்துங்கள். இடையூறாக இருக்கிறது'' எனக் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in