

கரோனா வைரஸ் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆர்டி- பிசிஆர் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று ஐசிஎம்ஆர் அமைப்பு உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐசிஎம்ஆர், டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 4-ம் தேதி ஐசிஎம்ஆர் அமைப்பு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில், “ ஒருமுறை ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுத்து ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டால், அவருக்கு மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்யத் தேவையில்லை” என உத்தரவிட்டது. வீட்டுத் தனிமையில் அல்லது மருத்துவமனையில் குறிப்பிட்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தாலே போதுமானது எனத் தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கரன் அகுஜா சார்பில் வழக்கறிஞர்கள் குல்தீப் ஜாஹரி, அனுபவ் தியாகி, ராஜத் பாட்டியா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ''கடந்த ஏப்ரல் 28-ம் தேதி எனக்கும் என் பெற்றோருக்கும் கரோனா உறுதியானது. அதன்பின் 17 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தோம். எங்கள் வீட்டுக்கு வெளியே, டெல்லி நகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்போது 17 நாட்கள் முடிந்த பின்பும் எங்கள் அத்தியாவசியத் தேவைக்குக் கூட பொருட்களை வாங்க முடியவில்லை.
கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்தால்தான் வெளியே அனுப்ப முடியும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்குத் தொடர்பு கொண்டால், கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 2-வது முறையாக பிசிஆர் பரிசோதனை அல்லது ரேபிட் ஆன்டி டெஸ்ட் செய்யக் கோரி உத்தரவு வரவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
கரோனா பரிசோதனை செய்ய மறுப்பதும், பொது சுகாதார வசதிகளை மறுப்பதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் பிரிவு 14, 21 ஆகியவற்றை மீறியதாகும்.
ஏற்கெனவே கரோனா பாசிட்டிவ் உறுதியானவர்கள் தாங்கள் குணமடைந்துவிட்டோம் என எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக இவ்வாறு தன்னிச்சையாகத் தடை விதிப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். ஆதலால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், ஜோதி சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஐசிஎம்ஆர் அமைப்பு, டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.