Published : 29 May 2021 04:59 PM
Last Updated : 29 May 2021 04:59 PM

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி 10 மடங்கு உயர்வு; மாநிலங்களுக்கான  மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த முடிவு: மத்திய அரசு அறிவிப்பு 

புதுடெல்லி

ரெம்டெசிவர் மருந்து போதிய அளவில் இருப்பதால் மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்தின் மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

கரோனா இரண்டாவது அலை பரவல் இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை உருவானது.

கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ரெம்டெசிவர் மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு டோஸ் மருந்து கள்ளச்சந்தையில் 20,000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மொத்தமாக 6 டோஸ் 9,400 ரூபாய்க்கு அரசால் விற்கப்படும் நிலையில் ரெம்டெசிவர் கள்ளச்சந்தையில் ரூ.1,20,000 வரை விற்கப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்தை வாங்க உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து மருந்து விநியோகத்தை முறைப்படுத்த மத்திய அரசே மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யதது.

ரெம்டெசிவர் மருந்து போதிய அளவில் இருப்பதால் மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்தின் மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த அரசு முடிவு செய்தது.

இதுகுறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி நாட்டில் பெரும் மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி நாள் ஒன்றுக்கு 33000 குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதைவிட பத்து மடங்கு கூடுதலாக, இன்று நாளொன்றிற்கு 3,50,000 குப்பிகள் தயாரிக்கப்படுகிறது.

ரெம்டெசிவர் மருந்தைத் தயாரிக்கும் ஆலைகளின் எண்ணிக்கையையும் ஒரே மாதத்தில் 20லிருந்து 60-ஆக அரசு உயர்த்தியிருக்கிறது. தேவைக்கும் அதிகமான மருந்துகள் தற்போது விநியோகம் செய்யப்படுவதால், ரெம்டெசிவர் மருந்து, நாட்டில் போதிய அளவில் உள்ளது.

இதனால் மாநிலங்களுக்கான ரெம்டெசிவர் மருந்தின் மத்திய ஒதுக்கீட்டை நிறுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. நாட்டில் ரெம்டெசிவர் மருந்தின் இருப்பைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய முகமை மற்றும் மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவசரத் தேவைகளை எதிர்கொள்ளும் உத்தியாக 50 லட்சம் குப்பிகளை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x