பொதுமக்கள் பீதி அடைவதை தடுக்க ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலி வேண்டாம்: மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள்

பொதுமக்கள் பீதி அடைவதை தடுக்க ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலி வேண்டாம்: மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள்
Updated on
1 min read

மணிப்பூரில் கரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்ஸ்களில் சைரனை ஒலிக்க வேண்டாம் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தாக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைவதுடன் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ கண்காணிப்பாளர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்கு வோருக்கு மணிப்பூர் மாநில மருத்துவ இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், “ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி பொதுமக்கள் மத்தியில் கரோனா வைரஸ் பீதியை உருவாக்குகிறது.

மேலும் இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரனை இனி ஒலிக்க வேண்டாம். சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்க வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,683 ஆக அதிகரித்துள்ளது. 612 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்னுபூர், உக்ருல், தவுபால், காக்சிங் மற்றும் சூரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது வரும் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in