

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சவும்யா சந்தோஷ் (30). இவர் இஸ்ரேலில் கேர்டேக்கராக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள ஆஷ்கெலன் நகரில் தங்கி வந்த அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இருந்து வீசப்பட்ட ராக்கெட் அவருடைய வீட்டின் மீது விழுந்து வெடித்தது. இதில் சவும்யா உயிரிழந்தார்.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவரது உடல் அங்கிருந்து டெல்லிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்து. சவும்யாவின் உடலுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.
சவும்யாவின் உடல் கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ட்விட்டரில் மத்திய அமைச்சர் வி.முரளிதீரன் கூறியுள்ளதாவது: சவும்யா சந்தோஷின் உடலை நான் முன்னின்று நேரில் பெற்றுக்கொண்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். சவும்யாவின் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிவை, அவரது குடும்பத்தார் பெறட்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.