

அசாம் மாநில புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்கிறார். அவர் 20 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர் ஆவார்.
அசாமில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக 60 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை பாஜக தக்கவைத்தது. ஏற்கெனவே முதல்வராக இருந்து வந்த சர்பானந்த சோனாவால் மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவருக்கும் முதல்வர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது.
இருவரும் நேற்று முன்தினம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.
இதையடுத்து, குவாஹாட்டியில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவியில் இருந்து சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்தார். அசாம் மாநில புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்கிறார்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா யார்?
ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் 15வது முதல்வராக இன்று பதவியேற்கிறார்.
52 வயதாகும் ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் ஜலுக்பரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1996 முதல் 2015 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா அப்போதைய காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோயுடன் ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு வெளியேறினார்.
2015ம் ஆண்டு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 2016 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அசாமில் பாஜக ஆட்சி அமைந்தநிலையில் அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இவர் 2001ம் ஆண்டு தொடங்கி 5வது முறையாக தொடர்ந்து ஜலுக்பரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், அசாம் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா முக்கிய பங்காற்றியவர்.
நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்காக பெரும் பணியாற்றிவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.