கரோனாவுக்கு அஞ்சாத போராட்ட விவசாயிகள்: கோதுமை அறுவடைக்குப் பின் டிக்ரி எல்லை திரும்பினர்

கரோனாவுக்கு அஞ்சாத போராட்ட விவசாயிகள்: கோதுமை அறுவடைக்குப் பின் டிக்ரி எல்லை திரும்பினர்
Updated on
2 min read

டெல்லியில் போராடும் விவசாயிகள், கோதுமை பயிர் அறுவடைக்காகச் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில், கரோனா பரவலுக்கு அஞ்சாமல் மீண்டும் டிக்ரி எல்லைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த வருடம் நவம்பர் முதல் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஹரியாணாவின் சிங்குர் மற்றும் பகதூர்கர், உத்தரப் பிரதேசத்தின் காஜிபூர் மற்றும் நொய்டாவின் எல்லைகளில் அமர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில், கரோனா, உடல்நலக் குறைவு மற்றும் தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் சுமார் 250 விவசாயிகள் உயிரிழந்தனர். இதன்பிறகும் தொடர்ந்த போராட்டம், கடந்த ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாய ஊர்வலத்தால் திசை திரும்பியது.

இதில் நிகழ்ந்த வன்முறையால் பல விவசாயிகள் போராட்டத்தை விட்டுவிட்டு வீடு திரும்பத் தொடங்கினர். இதனால், உ.பி.யின் நொய்டாவும், காஜிபூரும் காலியானது. இதனால் மனம் உடைந்த பாரதிய கிஸான் யூனியன் சங்கத் தலைவரான ராகேஷ் திகைத் அழுகுரலுடன் வேண்டுகோள் விடுத்தார். வைரலான இந்த வீடியோ பதிவால், காஜிபூரில் மட்டும் விவசாயிகள் மீண்டும் கூடினர்.

இதற்கிடையே மார்ச் மாத இறுதியில் சம்பா கோதுமை பயிர் அறுவடைக்காக மீண்டும் விவசாயிகள் வீடு திரும்பினர். தற்போது அறுவடை முடிவிற்கு வரும் நிலையில், பஞ்சாப்பில் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் டிக்ரி எல்லைக்கு நேற்று திரும்பியுள்ளனர். இதில், பெண்களும் திரளாக இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை, உக்ரஹான் பிரிவைச் சேர்ந்த பாரதிய கிஸான் சங்கத்தினர் ஒருங்கிணைத்து அழைத்து வந்திருந்தனர். கூடுதல் விவசாயிகளை போராட்டக் களத்தில் குவிக்கும் முயற்சியும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் உக்ரஹான் பிரிவின் பாரதிய கிஸான் சங்கத்தின் பஞ்சாப் தலைவர் கூறும்போது, ''அறுவடைக்குச் சென்ற விவசாயிகள் மீண்டும் போராட்டக் களம் திரும்ப மாட்டார்கள் என அரசு தவறாகக் கருதிவிட்டது. மறைந்த எங்கள் விவசாயத் தலைவர் தானா சேத் ஜாட்டின் பிறந் தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு விவசாயிகள் மீண்டும் குவிந்தனர்.

மே 2-ம் தேதிக்கு முன்பாக பழைய எண்ணிக்கையுடன் விவசாயிகள் போராட்டம் தொடரும். அனைவரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்வோம்'' எனத் தெரிவித்தார்.

கரோனா சோதனைக்கு மறுப்பு

இந்நிலையில், டிக்ரி மற்றும் சிங்குரில் போராடும் விவசாயிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய ஹரியாணா அரசு முன்வந்துள்ளது. இங்கு ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால் அந்த சோதனையில் உள்நோக்கம் இருக்கும் என அஞ்சி அதை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால் தங்களுக்குப் பரிசோதனை தேவையில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுபோல், தொற்றுக்கான சூழல் ஏற்பட்டால் தாங்களே பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிலைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கை

இதனிடையே, தங்கள் போராட்டத்தின் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு இடமில்லை என விவசாயிகள் கூறி இருந்தனர். எனினும், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பலரும் நடத்திய கூட்டங்கள் அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரானதாகக் கருதப்பட்டன. இதில், குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறப்படவில்லை. இருப்பினும், பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in