

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்
கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது. இருப்பினும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ரெம்டெசிவர் மருந்துகளை சிலர் கள்ளச்சந்தையில் பதுக்கி அதிகமான விலைக்கு விற்பனை செய்வதும், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் பார்ப்பதும் தொடர்ந்து வருகிறது.
இதைத் தடுக்க மகாராஷ்டிர அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல உத்தரப் பிரதேச அரசும் கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் உயர் அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தின் முடிவில், உத்தரப் பிரதேசத்தில் லாக்டவுன் ஏதும் நடைமுறைப்படுத்தப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆக்சிஜன் கொண்டுவரும் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், ஆக்சிஜன் வழங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலத்தில் ரெம்டெசிவர், ஃபேரிப்ளூ மருந்துகளை கள்ளச்சந்தையில் பதுக்குவோர் மற்றும் விற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவை காவல்துறை டிஜிபி உருவாக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அவ்வாறு மருந்துகளைப் பதுக்குவோர் மீது தேசிய பாதுகாப்புச்சட்டம், குண்டாஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.
ரெம்டெவிசிவர் மருந்துகள் உற்பத்தியாளர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், மருந்தின் சப்ளை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் எப்போதும 36 மணி நேரத்துக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு இருக்கவ வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.