

அசாம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவி்த்துள்ளது. ஆனால், மத்திய அரசைப் பொருத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசு சார்பில் தடுப்பூசி வாங்கி செலுத்த வேண்டும் அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின்படி, தடுப்பூசி தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் விற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரி்க்கும் சீரம் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.100க்கு மத்திய அரசுக்கும், ரூ.400்க்கு மாநில அரசுகளுக்கும், தனியாருக்கு ரூ.600க்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில் 18 வயது முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் இவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இன்று நிருபர்களிடம் கூறுகையில் “அசாம் மாநிலத்தில், மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
கடந்த ஆண்டு கரோனா காலத்தில் அசாம் ஆரோக்கிய நிதி என்று பெயரில் மக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது. அந்த நன்கொடையை பயன்படுத்தி மக்களுக்காக கரோனா தடுப்பூசி வாங்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே மாநில சுகாதாரத்துறை சார்பில், ஒரு கோடி தடுப்பூசி வாங்குவதற்காக கோவாக்ஸின் நிறுவனத்துடன் பேசி இருக்கிறோம்.
ஆகையால், 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு அசாம் அரசு சார்பில் கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும், 45வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்” எனத் தெரிவி்த்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிஸ்வாஸ் சர்மா சட்டப்பேரவையில் பேசுகையில் “அசாம் அரோக்கிய நிதித் திட்டத்தில் 53,534 பேரிடம் இருந்து ரூ.116.10 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அந்த பணத்திலிருந்துதான் தற்போது தடுப்பூசி வாங்கப்பட உள்ளது.