

மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை நடப்பதில்லை, படுக்கை வசதியில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக இருக்கிறது, போலியாகத் தடுப்பூசி திருவிழா நடத்துகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பாதிப்பின் அளவு 2 லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை திகா உத்சவ் எனும் தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.
ஆனால், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை, பரிசோதனையும் இல்லை. வென்டிலேட்டரும் இல்லை, ஆக்ஸிஜனும் இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், போலித்தனமாக தடுப்பூசி திருவிழா நடத்துகிறார்கள். மிகப்பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.