அபிஷேக் பானர்ஜி, ஸ்டாலின் மகள் வீடுகளில் வருமான வரித்துறையை ஏவி விடும் பிரதமர் மோடி, அமித் ஷா: மம்தா பானர்ஜி கடும் சாடல்

அபிஷேக் பானர்ஜி, ஸ்டாலின் மகள் வீடுகளில் வருமான வரித்துறையை ஏவி விடும் பிரதமர் மோடி, அமித் ஷா: மம்தா பானர்ஜி கடும் சாடல்
Updated on
1 min read

பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து ரவுடி கும்பலை அழைத்து வந்து குஜராத்தியர்கள், மேற்குவங்கத்தை கைபற்ற முயற்சி செய்கின்றனர் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில் ஹவுராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:

மோடி சிண்டிகேட் 1, அமித் ஷா சிண்டிகேட் 2. இவர்கள் இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகளை எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடுகின்றனர். அபிஷேக் பானர்ஜி வீட்டில் சோதனை நடத்தினர். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதுபோன்ற மிரட்டலால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விட முடியாது.

பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து ரவுடி கும்பலை அழைத்து வந்து குஜராத்தியர்கள் மேற்குவங்கத்தை கைபற்ற முயற்சி செய்கின்றனர். இவர்களால் மேற்குவங்கத்தில் மதக் கலவரமே நடக்கும். ஆனால் இதனை மேற்குவங்க மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

விவசாயிகளுக்கு பணம் கொடுக்க விடாமல் நான் தடுத்து விட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. அவர்கள் கேட்ட விவசாயிகளின் பட்டியலை நான் அனுப்பி வைத்து விட்டேன். ஆனால் இதுவரை மேற்குவங்க விவசாயிகளுக்கு அவர்கள் பணம் வழங்கவில்லை. மேற்குவங்க விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக் பானர்ஜி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in