

அம்ரேலி: தினசரி வட்டி தருவதாகக் கூறி நாடு முழுவதும் 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,200 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு உள்ளது.
குஜராத்தின் மெக்சனா நகரைச் சேர்ந்தவர் தாவல் படேல் (40). கடந்த 2024-ம் ஆண்டில் அவர் எஸ்டி பே, அப்னா பே ஆகிய இரு செயலிகளை தொடங்கினார். இந்த செயலிகள் வாயிலாக முதலீடு செய்யப்படும் தொகைக்கு தினசரி வட்டி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதை நம்பி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6.52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1,000 முதல் பல லட்சங்கள் வரை முதலீடு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்டி பே, அப்னா பே செயலிகள் திடீரென செயல் இழந்தன.
பாதிக்கப்பட்ட பெரு முதலீட்டாளர்கள் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். குஜராத்தின் அம்ரேலி போலீஸ் நிலையத்தில் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
அம்ரேலி போலீஸ் நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தினசரி வட்டி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி எஸ்டி பே, அப்னா பே செயலிகளில் 6.52 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.1,211 கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல நாடு முழுவதும் ஏராளமானோர் ஏமாந்து உள்ளனர்.
மிக அதிகபட்சமாக குஜராத்தில் 1.52 லட்சம் பேர் பணத்தை இழந்துள்ளனர். ராஜஸ்தானில் 1.36 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 74,000 பேரும், உத்தர பிரதேசத்தில் 45,000 பேரும், பிஹாரில் 31,000 பேரும், மத்திய பிரதேசத்தில் 30,000 பேரும் மோசடி செய்யப்பட்டு உள்ளனர். மோசடியின் மூளையாக செயல்பட்ட தாவல் படேல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளிகள் 11 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணம் 7 போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.