ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
Updated on: 
1 min read

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ளார்.

இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2024-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர்.

இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி அப்போதே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத் துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இதில் ஒருவரை, சென்னை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் நவ.6-ம் தேதி ஆஜராகுமாறும், மற்றொருவரை அடுத்த வாரம் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: சி.விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்
முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை: நவ.7 வரை விநியோகம்

X