

டாடா நிறுவனத் தலைவர் பொறுப் பிலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்குவதென்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் முடிவு சரியான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன்டாடா வெளியேறிய பிறகு, புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி2012-ம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் அவரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த குழுமம் 2016-ம் ஆண்டு அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. இதை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தேசியநிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏ டி) முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த என்சிஎல்ஏடி சைரஸ் மிஸ்திரியை மீண்டும் தலைவர் பதவியில் நியமிக்க வேண்டும் என 2019-ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது இடைக்கால தீர்ப்பாக, தேசிய நிறுவன தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் சைரஸ் மிஸ்திரியை தலைவராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்று என்சிஎல்ஏடி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.எஸ். பாப்டேமற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சம உரிமை பங்குகளில் தங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்என்ற ஷபூர்ஜி பலோன்ஜி (எஸ்பி) குழுமத்தின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. எஸ்பி குழுமத்தின் பங்கு விலையை டாடா சன்ஸ் மட்டுமே தீர்மானிக்க முடியும். அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
டாடா குழுமத்தின் தலைவரான (எமிரேட்டஸ்) ரத்தன் டாடா (வயது 83) டிவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது: உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பை தான் வெகுவாக மதிக்கிறேன். இதில் வெற்றியோ அல்லது தோல்வி என்பதோ அல்ல. குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் என் மீதான நம்பகத்தன்மை ஆகியவற்றின் மீது போடப்பட்ட களங்கம் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயரிய நடைமுறையை கடைப்பிடிக்கும் குழுமம் டாடாசன்ஸ் என்பது நிரூபணமாகி யுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.