

என்னைப் பதவி நீக்கம் செய்வது குறித்துக் கவலையில்லை. தொடர்ந்து விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் போராட்டத்தை பாஜக தொடர்ந்து அசட்டை செய்துவந்தால் எதிர்காலத்தில் உ.பி., ஹரியாணா, ராஜஸ்தானில் பாஜக வலுவிழக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
''ஒரு தெருநாயின் உயிரிழப்பு கூட வருந்தத்தக்க செய்தியாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால், தலைநகர் டெல்லியில் இதுவரை 250 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் துறந்துள்ளனர். இதைப் பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை, பாஜக தொடர்ந்து அசட்டை செய்துவந்தால் எதிர்காலத்தில் உ.பி., ஹரியாணா, மேற்கு ராஜஸ்தானில் பாஜக வலுவிழக்கும்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசிவருகிறேன். விவசாயிகளை வெறுங்கைகளுடன் போராட்டக் களத்திலிருந்து திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். ஒருவேளை விவசாயிகளுக்குக் குரல் கொடுப்பதால் நான் அரசாங்கத்தை எதிர்க்கிறேன் என நினைத்தால் நான் ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன். என்னைப் பதவி நீக்கம் செய்தலும் கவலையில்லை. ஆளுநராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்.
விவசாயிகளின் இந்த நிலையை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க இயலவில்லை. என் பேச்சு பாஜகவை பலவீனப்படுத்தும் என நான் நினைக்கவில்லை. மாறாக யாரேனும் ஒருவராவது நமக்காகக் குரல் கொடுக்கிறார்களே என்ற எண்ணத்தையே விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும்''.
இவ்வாறு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் 100 நாட்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.