

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாயி சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்துள்ளார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுஷில் அகர்வால் கூறியதாவது:
கரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வீட்டிலேயே முடங்கினேன். அப்போது சில புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். பொதுமுடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட பிறகு எரிபொருள் விலை உயர்ந்து வந்தது.
அப்போது மின்சாரத்தில் இயங்கும் காரை தயாரிக்கும் எண்ணம் தோன்றியது. இது தொடர்பாக சில புத்தகங்களை படித்தேன். யூ-டியூபில் சில வீடியோக்களை பார்த்தேன். பின்னர் என்னுடைய வீட்டிலேயே பணி மனையை உருவாக்கி மின்சார காரை தயாரிக்க தொடங்கினேன்.
இந்தக் காரை சூரிய சக்தி பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளேன். 850 வாட்ஸ் மோட்டார், 100 ஏஎச்/54 வோல்ட்ஸ் பேட்டரியில் இந்தக் காரை தயாரித்துள்ளேன். இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் பயணிக்கலாம். இந்த பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக 8.5 மணி நேரம் ஆகும். மெதுவாக சார்ஜ் ஆகும் பேட்டரி என்பதால், இது 10 ஆண்டுகள் வரை உழைக்கும்.
இந்தக் கார் தயாரிக்கும் பணி முழுவதையும் என்னுடைய வீட்டில் உள்ள பணி மனையிலேயே முடித்துவிட்டேன். இதற்காக 2 மெக்கானிக் உதவி செய்தனர். மேலும் மின்சார பணிகள் தொடர்பாக எனது நண்பர் ஆலோசனை வழங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மயூர்பஞ்ச் வட்டார போக்குவரத்து அதிகாரி கோபால் கிருஷ்ண தாஸ் கூறும்போது, “சுஷில் அகர்வால் சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்து தயாரித்தது பற்றிய தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இதுபோன்ற வாகனங்கள்தான் இத்துறையின் எதிர்காலம். இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு சமுதாயம் ஊக்கமளிக்க வேண்டும்” என்றார்.
இந்தக் கார் தயாரிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன போதிலும், அது முதற்கட்ட நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.