

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் நிலத் தகராறு காரணமாக, ஒரு சிலரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டத்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திஹ்வா கிராமத்தைச் சேர்ந்த ஹரிராம் என்பவர், சிலருடன் நிலம் தொடர்பான பிரச்சனையில் இருந்தார். நேற்று நடந்த வாக்குவாதத்தில், ஹரிராமின் எதிரிகள் சிலர், அவரது மனைவியை பலமாகத் தாக்கினர். அவரைக் காப்பாற்ற வந்த அவரது தோழி ஒருவர் அந்த கும்பலால் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
"பாதிக்கப்பட்ட பெண், சிலர் தன்னை தாக்கியதாகவும், பிறகு ஒரு வீட்டிற்குள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்" என சட்டம் ஒழுங்கு தலைமை ஆய்வாளர் அம்ரேந்திர செங்கார் லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூன்று நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது" என்று செங்கார் தெரிவித்தார்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் உறுதி செய்யப்படவில்லை ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்று அமேதி மாவட்ட நீதிபதி ஜகத்ராஜ் திரிபாதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஹீராலால் ஆகியோர் கூறியுள்ளனர்.