

பருவமழைக் காலம் தொடங்கும் முன், நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழைநீர் சேகரிக்கவும் 100 நாட்கள் பிரச்சாரம் செய்ய 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 74-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
''நூற்றாண்டுகளாக மனிதகுல வளர்ச்சிக்குத் தண்ணீர் மிகவும் முக்கியமான பங்காற்றி வருகிறது. ஆதலால், நீரைப் பாதுகாக்கும் விஷயத்தில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மே-ஜூன் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை தொடங்கிவிடும். பருவமழை தொடங்குவதற்கு முன் நாட்டில் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழை நீரைச் சேகரிக்கவும் 100 நாட்கள் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் 'கேட்ச் தி ரெயின்' எனும் பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளன. மழை நீர் எங்கு பெய்தாலும், எப்போது பெய்தாலும் பாதுகாக்க வேண்டும். பருவமழை வருவதற்கு முன், நீர் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்க இதுவே சிறந்த நேரம்.
உள்நாட்டில் பொருட்களை நினைத்து மக்கள் பெருமைப்பட வேண்டும். தற்சார்பு இந்தியா என்பது வெறும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்ல, தேசத்துக்கான உத்வேகம்.
நாடு முழுவதும் அறிவியலை நாம் பரவலாக்குவது அவசியம். அறிவியல் என்பது வேதியியல், இயற்பியல் ஆகிய இரு பிரிவுகளோடு, ஆய்வகத்தோடு முடிவதில்லை. ஆய்வகத்திலிருந்து உண்மையான தளத்துக்கு அறிவியலைக் கொண்டுவர வேண்டும்.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பிரதமராகவும், முதல்வராகவும் நீண்டகாலமாக இருந்த காலத்தில் உங்களால் தவறவிட்ட விஷயங்கள் என்ன என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை என்னால் கற்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுக்க முடியாமல் போனதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.