

அசாம் செல்வதற்குப் பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், டெல்லியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த இறுதியான தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நாட்டின் பொருளாதாரம் மந்தமான சூழலில் இருக்கும் நிலையில், நாட்டின் வேளாண்துறை 3.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதற்கு விருது கொடுக்க வேண்டும். ஆனால், விவசாயிகளை மத்திய அரசு எதிரிகள் போல் நடத்துகிறது.
பிரதமர் மோடி கேரளாவில் இருந்து அசாம் மாநிலத்துக்குச் செல்வதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், டெல்லியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் போராடிவரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை.
ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்குவேன் எனக் கூறுகிறார். அனைத்தும் உண்மை என்னவென்றால், 6 சதவீத விவசாயிகள்தான் தங்கள் உற்பத்தி பொருட்களைக் குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்கிறார்கள்".
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பேட்டியில், "புதிய வேளாண் சட்டங்களின் எந்த அம்சம் குறித்துப் பேசுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை வரவேற்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.