

எதிர்காலத்திற்கான எரிசக்தியாக ஹைட்ரஜனை நாங்கள் பார்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
ஹைட்ரஜனுக்காக உயர்சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் கிரீன்ஸ்டாட் நார்வேயின் துணை நிறுவனமான கிரீன்ஸ்டாட் ஹைட்ரஜன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையெழுத்திட்ட நிகழ்வில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.
இந்திய- நார்வே நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒத்துழைப்போடு தூய்மையான எரிசக்திக்காக கரியமில பயன்பாடு மற்றும் எரிபொருள் செல்கள் உள்ளிட்ட ஹைட்ரஜனுக்கான உயர்சிறப்பு மையத்தை உருவாக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதான், புதிய மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள்களுக்கு இந்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
எரிசக்தி நுகர்வில் உலகின் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாலும், எரிசக்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உலகின் எந்த மூலையில் உள்ள எரிசக்தி தொழில்முனைவோரும் முதலீடு செய்யவதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.
அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைதல் ஆகியவற்றுக்கிடையே வலுவான கூட்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஹைட்ரஜன் எரிசக்தி குறித்து பேசிய அவர், “எதிர்காலத்திற்கான எரிசக்தியாக ஹைட்ரஜனை நாங்கள் பார்க்கிறோம்,” என்று கூறினார். ஹைட்ரஜன்- அழுத்த மூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் டெல்லியில் இயங்கும் 50 பேருந்துகள் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹன்ஸ் ஜேக்கப் ஃப்ரைடென்லுண்ட் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.