

டிராக்டர்களுடன் மேற்கு வங்க மாநிலம் செல்வது எங்கள் அடுத்த குறி என பாரதிய கிஸான் யூனியன் (பிகேயூ) தலைவரான ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களின் அங்கமாக ஆங்காங்கே மஹா பஞ்சாயத்துகள் நடைபெறுகின்றன. இதில் விவசாயிகள் திரளாகக் கூடி தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டி வருகின்றனர்.
இந்த வகையில், உத்தரப் பிரதேசத்தை அடுத்து ஹரியாணாவிலும் மஹா பஞ்சாயத்து தொடங்கியுள்ளது. நேற்று இம்மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் கடக் பூணியா கிராமத்தில் நடந்த மஹா பஞ்சாயத்தில் பிகேயூவின் ராகேஷ் திகைத்தும் கலந்துகொண்டார்.
அதில் ராகேஷ் திகைத் கூறும்போது, "மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள். இப்போராட்டத்தின் மூலமாக நம் நாட்டின் அரசியல் சூழலை மாற்றுவோம். மேற்கு வங்க மாநிலத்தில் இதை அடுத்த ஒரு மாதத்தில் செய்து காட்டுவோம்.
இதற்காக, தங்கள் டிராக்டர்களுடன் மேற்கு வங்க மாநிலம் செல்வதுதான் விவசாயிகளின் அடுத்த குறி. அம்மாநிலத்தின் விவசாயிகளும் மத்திய அரசின் கொள்கைகளால் பிரச்சனைக்குள்ளாகி விட்டனர். அவர்களையும் அதிலிருந்து போராடி மீட்பது எங்கள் பொறுப்பு. எங்கள் போராட்டத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், விவசாயிகள் தம் பயிர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும் தயாராக இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
அரசியலாகிறதா விவசாயிகள் போராட்டம்?
இந்த அறிவிப்பின் மூலம், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகளுக்கும் சாதகமாக நடத்த முயல்வது தெரிகிறது. கடந்த வருடம் நவம்பரில் இவர்கள் டெல்லி எல்லைகளில் முதன்முதலாகப் போராட்டம் தொடங்கியபோது, அரசியல் கட்சிகளை விலக்கி வைத்திருந்தனர்.
தமிழகத்திலும் மஹா பஞ்சாயத்து
இதுபோன்ற மஹாபஞ்சாயத்துகள் தமிழகம், குஜராத், கர்நாடகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அம்மாநில விவசாய சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.