

யஜுவேந்திர சாஹல் குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் யஜுவேந்திர சாஹல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து கிண்டலாகப் பேசினார். அப்போது, சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஜத் கல்சான் என்பவர் நேற்று ஹிசார் நகர போலீஸிடம் யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், இந்திய அணி வீரர் சாஹல் குறித்து சாதி ரீதியாகப் பேசிய யுவராஜ் சிங்கை கைது செய்ய வேண்டும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஹிசார் போலீஸார் யுவராஜ் சிங் மீது, ஐசிபி 153, 153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளிலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1), 3 (1எஸ்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, சமூக வலைதளங்களில் யுவராஜ் மீது கடுமையான எதிர்ப்பு பதிவானது. இதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் தனது ட்விட்டர் தளத்தில் மன்னிப்பு கோரினார். அதில், “சிலரின் உணர்வுகளை நான் எந்தவிதமான உள்நோக்கம் இன்றி காயப்படுத்தி இருந்தால், நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இந்தியர்கள் அனைவரையும் விரும்புகிறேன்.
நான் எந்தவிதமான பாகுபாட்டையும் யாரிடமும் பார்க்கவில்லை. சாதி, மதம், நிறம், பாலினம் எதன் அடிப்படையிலும் பாகுபாடு பார்க்கவில்லை. மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து என்னால் முடிந்த பணிகளைச் செய்வேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி, தனிநபர்களுக்கு மரியாதையான வாழ்க்கை, கவுரவம் கிடைக்க வேண்டும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.