

உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உருகி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். 125 பேர் மாயமகினர்.
உத்தரகாண்ட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக சமோலி மாவட்டத்தின் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் பனிச்சரிவும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டப் பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 125 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ரிஷிகங்கா மின் திட்டமும் வீடுகளும் முற்றிலும் சேதமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கித் தவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்ட மக்கள் பேரிடர் செயல்பாட்டு மைய எண் 1070 அல்லது 9557444486 ஐ தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெள்ளப் பெருக்கில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது .
மேலும் உத்தரகாண்ட்டில் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டாலின் ட்வீட்:
இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தராகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி, அதன் காரணமாக உருவான வெள்ளம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என விழைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.