உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்; ரிஷிகங்கா மின் திட்டம் சேதம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்; ரிஷிகங்கா மின் திட்டம் சேதம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
Updated on
2 min read

பனிப்பாறை உடைந்து நதியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்ததன் காரணமாக அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளின் கரையோரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

உத்தரகாண்ட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக சமோலி மாவட்டத்தின் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் பனிச்சரிவும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள ரிஷிகங்கா மின் திட்ட பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ரிஷிகங்கா மின் திட்டமும் வீடுகளும் முற்றிலும் சேதமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கித் தவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்றாலும், உயிரிழப்புகளும் அஞ்சப்படுகின்றன.

நதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை ஆகிய குழுக்கள் தேடல் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன.

மேலும் விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், கர்ன்பிரயாக், ருத்ரபிரயாக், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் ஆகிய அனைத்து தாழ்வான மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மக்கள் நதிக் கரைகளை நோக்கி வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது ட்விட்டர் பகுதியில் கூறியுள்ளதாவது:

மக்களை பீதியடையவோ வதந்திகளைப் பரப்பவோ கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரழிவு மீட்புக் குழுக்கள் நிலைமையைக் கையாண்டு வருகின்றன.

மக்கள் எந்தவிதமான வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் ஆய்வு செய்து வருகிறேன்.

நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்டால், உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து பேரிடர் செயல்பாட்டு மைய எண் 1070 அல்லது 9557444486 ஐ தொடர்பு கொள்ளவும். தயவுசெய்து இந்த சம்பவம் குறித்து பழைய வீடியோக்களில் இருந்து வதந்திகளை பரப்ப வேண்டாம்"

இவ்வாறு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in