

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்களை பதிவிட்டு வரும் கணக்குகளை முடக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள்டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேமோதல் ஏற்பட்டது. இதில், விவசாயிகள் தாக்கியதில் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக, ‘விவசாயிகளை படுகொலை செய்ய மோடி திட்டமிடுகிறார்’ என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும் விதமான ‘ஹேஷ்டேக்’ கடந்த சனிக்கிழமை முதல் ட்விட்டரில் ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது.
எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி, சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பதிவிடப்பட்டிருக்கும் இந்த ஹேஷ்டேக்கையும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டு வருவோரின் கணக்குகளையும் முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. இதன்பேரில், 257-க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
ஆனால், நேற்று முன்தினம் முதல் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. அதேபோல், சர்ச்சைக்குரிய ஹேஷ்டேக்கும் மீண்டும் வைரலானது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை சார்பில்நேற்று கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற பதிவுகள் ட்விட்டரில் வெளியாகி வருகின்றன. இவை யாவும்பொய்யான தகவல்களை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வன்முறையை தூண்டும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருக்கின்றன. குற்றச்செயல்களை தூண்டும் விதமான பதிவுகளை கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும்.
இதனைக் கருத்தில்கொண்டே, சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசுஅறிவுறுத்தியது. ஆனால், தற்போது அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையால், குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும் சூழல் உருவாகிவிடும்.
எனவே, மத்திய அரசின் மேற்குறிப்பிட்ட உத்தரவுக்கு இணங்க மறுத்ததற்கு ட்விட்டர் நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும். சமூகத்தில் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்துடன் அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இணங்கி நடக்க வேண்டும். இல்லையெனில், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இந்த விவகாரங்களில் நீதிமன்றம் போல ட்விட்டர் நிறுவனம் செயல்பட முடியாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.