

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்ேவறு மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கி இருந்தனர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.
இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒரு பிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்.
டெல்லியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் சார்பில் 29 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனோகர் லால் சர்மா என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் “ அதிகாரிகளும், ஊடகங்களும் முறையான ஆதாரங்கள் இன்றி, விவசாயிகளை தீவிரவாதிகள் என்று முத்திரையிடக்கூடாது. இந்த கலவரத்தில் திட்டமிட்ட சதி இருக்கிறது.
போராடும் விவசாயிகள் மீது தவறான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களின்றி கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.