ட்விட்டர் கணக்குகள் முடக்கம்; சீன ஆக்கிரமிப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்தும், எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு குறித்தும் மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்துக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்த 250 ட்விட்டர் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட 250 ட்விட்டர் கணக்குகள் நேற்று முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட அந்தக் கணக்குகள் குறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து வந்த போலியான முகவரி கொண்ட 250 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சகம், போலீஸார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பாடாமல் தவிர்க்கும் வகையில் அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மோடியின் நிர்வாகத்தின் ஸ்டைல் என்பது, எதிராகப் பேசுபவர்களின் வாயை அடைப்பது, அவர்களை நீக்குவது, கீழே போட்டு நசுக்குவதுதான்” எனத் தெரிவித்திருந்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அறிவுரை கூறும் வகையில் ராகுல் காந்தி பதிவிட்ட மற்றொரு ட்விட்டர் கருத்தில், “மத்தியில் ஆளும் அரசு பாலங்களைக் கட்ட வேண்டும், சுவர்களை அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.

டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராடிவரும் விவசாயிகள் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடினமான தடுப்புகளை போலீஸார் அமைத்து வருகின்றனர். அதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகள் போராடும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.

சீன ராணுவம் ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து தயாராகி வருகிறது. தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது சீன ராணுவம். ஆனால், நம்முடைய பிரதமர் சீனா குறித்து ஒருவார்த்தைகூட பேசுவதற்கு அஞ்சுகிறார். மிகப்பெரிய பேரழிவைத் தவிர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கை அவசியம். ஆனால், துரதிருஷ்டம். மோடிக்கு அந்தத் துணிச்சல் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சீன ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு செய்தியின் இணைப்பையும் ட்விட்டரில் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in