

விவசாயிகளைத் தாக்கி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாகத் தொடர்ந்த இப்போராட்டத்தில் குடியரசு தினத்தன்று டிராக்டர் ஊர்வலத்தால் கலவரம் நிகழ்ந்தது.
இக்கலவரத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூன்று சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க விவசாயிகளைப் பிளவுபடுத்தவும் அச்சுறுத்தவும் அரசாங்கம் முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''பிரதமர் நரேந்திர மோடி, நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைத் தாக்கி இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறார். இதனால் தேசவிரோத சக்திகள் மட்டுமே பயனடைவார்கள்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "விவசாயிகளின் நம்பிக்கையே நாட்டின் தலைநகரம். அவர்களின் நம்பிக்கையை மீறுவது குற்றம். அவர்களின் குரலைக் கேட்காதது பாவம். அவர்களை அச்சுறுத்துவதும் பெரும் பாவம். விவசாயிகள் மீதான தாக்குதல் நாட்டின் மீதான தாக்குதல் ஆகும். பிரதமர், நாட்டைப் பலவீனப்படுத்த வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.