

டெல்லி சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகள் போராட்டத்துக்குள் ஆர்எஸ்எஸ் சார்பு ஆட்களை அனுப்பி மத்திய அரசு கலகத்தைத் தூண்டுகிறது என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் குழுவின் தலைவர் சத்னம் சிங் பன்னு குற்றம் சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட டிராக்டர் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். விவசாயிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்தக் கலவரம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தலைவர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட தலைவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லா வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லி, சிங்கு, திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும் பகுதிகளில் நேற்று முதல் டெல்லி போலீஸார், துணை ராணுவத்தினர் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், எல்லைப்பகுதி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர், நிர்வாகிகள் மூலம் விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பன்னு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “எங்கள் போராட்டத்தைச் சீர்குலைக்க பல்வேறு மோசமான தந்திரங்களை மோடி அரசு பயன்படுத்துகிறது.
ஆர்எஸ்எஸ் சார்பு ஆட்களைப் போராட்டத்துக்குள் அனுப்பி, எங்களுக்குள் கலகத்தை விளைவிக்க மத்திய அரசு முயல்கிறது. இருமுறை இதுபோல் நேற்று நடந்தது. நாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் திரும்பிச் செல்லமாட்டோம்.
இன்று மாலை இன்னும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் இணைய உள்ளார்கள். போராடும் விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்குச் செல்லவில்லை. நாங்கள் திட்டமிட்டபடி போலீஸார் கூறிய சாலையில்தான் சென்றோம். பாதை மாறிச் செல்லவில்லை.
மத்திய அரசு தங்களுக்குச் சொந்தமான ஆட்களைச் செங்கோட்டைக்கு அனுப்பிவைத்து வன்முறையில் ஈடுபட வைத்து வழக்குகளை மட்டும் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் யாரும் வன்முறையில், அராஜகத்தில் ஈடுபடவில்லை. எங்களுக்கு எதிராக ஏதோ சதி நடந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.