விவசாயிகளின் கோபத்தை தூண்டி வன்முறையில் இறக்கியது பாஜக; தீப் சித்து பிரதமர் மோடி, அமித் ஷா ஆதரவாளர்: சிவசேனா குற்றச்சாட்டு

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
Updated on
2 min read


விவசாயிகளிடம் கோபத்தை தூண்டி வன்முறையை இறக்கியது பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் டெல்லியில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீலஸார் காயமடைந்தனர்.

விவசாயிகள் தரப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விவசாயிகளில் ஒருதரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குச் சென்று விவசாயிகளின் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடேனா "சாம்னா"வில் டெல்லி வன்முறை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த சம்பவங்களுக்கு ஒருவரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். டெல்லி சிங்கு எல்லையில் கடந்த 60 நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனவரி 26-ம் தேதி அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடக்கும் என விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், போலீஸாரின் தடுப்புகளை மீறி, தங்கள் டிராக்டர்களை டெல்லி எல்லைக்குள் கொண்டு சென்று, செங்கோட்டையை நேரடியாக அடைந்தனர்.

குடியுரசுதின நிகழ்ச்சிகள் டெல்லி ராஜபாதையில் காலையில் நடந்தபோது மக்கள் கவனம் அங்கு இருந்தநிலையில், பிற்பகலுக்குப்பின், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் விவசாயிகள் நடத்திய ஊர்வலத்தின் மீது விழுந்தது. டெல்லியில் தீடீரென அச்சமான சூழல் உருவாகியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. குடியரசுதினத்தன்று நடந்த சம்பவங்களால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பாஜக கூறி வருகிறது. டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, விவசாயிகள் போராட்டம் தீவிரவாதிகளின் கரங்களுக்குச் சென்றுவிட்டது என்று பாஜகவின் உளவுத்துறை கூறுகிறது.

டெல்லி செங்கோட்டையில் சென்று கொடியேற்றிய ஒருபிரிவினர் தீப் சித்து எனும் இளைஞர் தலைமையில் சென்றுள்ளனர். தீப் சித்து என்பவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரின் பாசறையைச் சேர்ந்தவர். பஞ்சாப் பாஜக எம்.பி. சன்னி தியோலின் நெருங்கிய உறவினர் தீப் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தலைவர் ராஜேஷ் திக்கத் கூறுகையில் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் பேசிய தீப் சித்து புரட்சி செய்வது குறித்தும், பிரிவினைவாதம் குறித்தும்தான் பேசினார் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 60 நாட்களாக விவசாயிகள் போராட்டம், அமைதியாகச் சென்றது. விவசாயிகள் போராட்டத்தில் எந்தவிதமான பிளவும் இல்லை, விவசாயிகளின் பொறுமையும் சிதையவில்லை. இதனால்தான் மத்திய அரசு வேறுவழிதெரியாமல் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது.

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் இயக்கத்தினர் புகுந்துவிட்டார்கள் என்று மத்திய அரசு பழிசுமத்தியபோதிலும், விவசாயிகள் அமைதியாக இருந்தார்கள். விவசாயிகளுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும்தூண்டி, வன்முறையில் இறக்கியது பாஜகதான், அவர்களின் போராட்டத்தையும் களங்கப்படுத்த முயன்றது. ஒருவேளை கடந்த 26-ம் தேதி மத்திய அரசின் ஆசைகள் நிறைவேறியிருந்தால் அது தேசத்துக்கு அவமரியாதைதான்.

டெல்லி வன்முறைக்கு விவசாயிகளை மட்டும் பொறுப்பாக்குவது சரியல்ல. மத்திய அரசு தனக்கு வேண்டியதை செய்து கொண்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள், போலீஸார், இளஞைர்கள்தான் ரத்தம் சிந்தினார்கள்.

மீண்டும் பஞ்சாப் மாநிலம் கொந்தளிப்பானால், நாட்டுக்கு அது நல்லதல்ல. பஞ்சாப் விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது நாடுமுழுவதும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று மத்திய அரசு கோருவது தவறு. ஒட்டுமொத்த தேசமும் பஞ்சாப் பக்கம் நின்றது.

செங்கோட்டையில் தேசியக் கொடி இறக்கப்பட்டது குறித்து பாஜக ஆதரவு ஊடகங்கள் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக குரல் கொடுக்கின்றன. ஆனால், பொய்கள் அனைத்தும் கிழிந்துவிட்டன. செங்கோட்டைக்கு இளைஞர்களை தலைமை ஏற்று அழைத்துச் சென்ற சித்து, பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடையவர். யாரும் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை, மதம் சார்ந்த கொடி செங்கோட்டையில் ஏற்பட்டது, யாரும் உண்மையை வெளிப்படுத்த தயாராக இல்லை.

டெல்லி போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in