

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளான லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இன்று டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான லாலு, பிஹாரின் முதல்வராக இருந்தபோது கால்நடைத் தீவன ஊழல் புகார் எழுந்தது. பல ஆண்டுகளாக சிபிஐ விசாரித்த வழக்கில் லாலு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சிறை தண்டனை பெற்றார்.
இதனால், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டவருக்கு சர்க்கரை நோய் தீவிரமானது. அதற்காக அங்குள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாகச் சிகிச்சை பெறுகிறார்.
இந்நிலையில் லாலுவின் நுரையீரலில் இருந்த தொற்று காரணமாக நேற்று முதல் அதில் நீர் கட்டத் தொடங்கியுள்ளது. இதனால், அவரது முகம் வீங்கி, சிறுநீரகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாலு, இன்று விமான ஆம்புலன்ஸ் மூலமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட உள்ளார்.
அவருடன் பிஹாரின் முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவியும், மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவும் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னதாக நேற்று லாலுவை ரிம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தனர். அப்போது லாலுவின் உடல்நிலை மோசமானதைக் கண்டு ராப்ரி கண்ணீர் விட்டு அழுதார். தன் தந்தையின் உடல்நிலை குறித்து இன்று காலை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனைச் சந்தித்து தேஜஸ்வி பேசினார்.
இதுகுறித்து தேஜஸ்வி கூறும்போது, ''தண்டனைக்குள்ளான எனது தந்தை நீரிழிவு நோய் மற்றும் இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகச் செயல்பாடுகள் குறைந்துள்ளன. அவர் 70 வயதைத் தாண்டியவர் என்பதால் கரோனா வைரஸ் தொற்று அபாயமும் உள்ளது. இதனால் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரிம்ஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்.
இதற்குமுன் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் லாலுவின் உடல்நிலை கவலைக்கிடமானது. அதன் பிறகு தீவிர சிகிச்சையால் மீண்டவர், இப்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.