

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு போராடும் விவசாயிகள் அமைப்புகளுடன் நடத்திய 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. கடுங்குளிரிலும் மழையிலும் நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் லைவ் #AskCaptain அமர்வில் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
''நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எந்தவித வாக்கெடுப்பும் இன்றி இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்றுதான் போராட்டக்காரர்கள் மத்திய அரசை வலியுறுத்துகிறார்கள். டெல்லி எல்லையில் அமர்ந்திருக்கும் எங்கள் விவசாயிகள் குறித்து அனைத்து பஞ்சாபியர்களும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.
டெல்லி எல்லைகளில் ஏராளமான முதியவர்கள் அமர்ந்திருப்பது தமக்காக அல்ல, நம் அனைவரின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் விவசாயிகளைக் கடுங்குளிர் காரணமாக இழந்து கொண்டிருக்கிறோம். இதுவரை பஞ்சாப்பைச் சேர்ந்த 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பஞ்சாப் அரசு அரசு வேலை அளிக்கும்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சில கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன. மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது மனிதாபிமானம் அற்றது. ஆனால், நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்.
போராட்டத்தை ஆதரிக்கும் சில விவசாயிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் தவறான நோக்கத்தில் செயல்படுதாக அவர்களுக்குத் தேசிய புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன்.
நீங்கள் பஞ்சாபிகளுடன் முறையாகப் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தால், அவர்கள் உங்கள் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நீங்கள் கம்பு ஒன்றை எடுத்தால், அவர்களும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள் .
மத்திய அரசு மிருகத்தனமான பெரும்பான்மையுடன் இருப்பதால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை இயற்றி வருகிறது. நாட்டில் ஒரு அரசியலமைப்பு உள்ளதா? விவசாயம் என்பது அட்டவணை 7-ன் கீழ் ஒரு மாநிலப் பொருள் எனும்போது, மத்திய அரசு ஏன் மாநில விஷயத்தில் தலையிடுகிறது?
டெல்லி எல்லையில் நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட அனைத்து விவசாயத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் அல்ல. நாட்டின் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து நடத்தப்பட்டுவரும் போராட்டம் ஆகும்.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலையும் மண்டி முறையும் முடிவுக்கு வரும். பி.டி.எஸ் விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக மத்திய அரசால் வாங்கப்படும் உணவு தானியங்களும் முடிவடையும். பின்னர் ஏழைகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள்?''
இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்.