விவசாயிகள் சங்கத் தலைவர்களில் 4 பேரைக் கொல்ல சதி; டிராக்டர் பேரணியை சீர்குலைக்க திட்டம்: பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேற்று பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.
டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேற்று பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் 4 பேரைக் கொன்று, டிராக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்குலைவையும் உருவாக்க சதித்திட்டம் நடக்கிறது என்று விவசாயிகள் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தை விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறோம் எனும் திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல், எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படாமல் அதிருப்தியுடன் முடிந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்திவந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒரு நபர் சந்தேகத்திடமான முறையில் இருப்பதைப் பார்த்து அவரைப் பிடித்தனர். அவரிடம் விவசாயிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

பிடிபட்ட நபரை விவசாயிகள் முகமூடி போட்டு அமரவைத்துள்ள காட்சி
பிடிபட்ட நபரை விவசாயிகள் முகமூடி போட்டு அமரவைத்துள்ள காட்சி

பிடிபட்ட அந்த நபரை வைத்துக்கொண்டு, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறியதாவது:

“நாங்கள் போராடும் போராட்டக் களத்தில் முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்துள்ளோம். அந்த நபரை ஹரியாணா போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம். நாங்கள் நடத்தும் போராட்டத்தைச் சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

நாங்கள் நடத்தும் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் 4 பேரைக் கொலை செய்யவே அந்த நபர் வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் 26-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிாரக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது.

ஹரியாணா போலீஸார் முகமூடி அணிந்த நபரைப் பிடித்துச் சென்ற காட்சி
ஹரியாணா போலீஸார் முகமூடி அணிந்த நபரைப் பிடித்துச் சென்ற காட்சி

டெல்லி போலீஸார் மீது அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி, டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும், இதன் மூலம் போராடும் விவசாயிகள் மீது போலீஸார் பதில் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு குல்வந்த் சிங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in