

போராடும் விவசாயிகள் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து போபாலில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதி கூறியதாவது:
''போராடும் விவசாயிகள் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். புதிய வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளைத் தீர்க்கும் வழிதான் நமக்கு முக்கியமானது. இதில் மத்திய அரசும், போராட்ட விவசாயிகளும் பிடிவாதம், ஈகோ வராமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத் தலைவர்கள் மகேந்திர சிங் டிக்கைட் மற்றும் ஷரத் ஜோஷி ஆகியோரின் தலைமையில் விவசாயிகள் ஒன்றாகத் திரண்டனர். விவசாயத்தில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அவற்றின் விளைபொருட்களின் விலை தொடர்பான தங்களின் குறைகளைத் தீர்க்கவே அவர்கள் போராட்டம் நடத்தினர் .
விவசாயிகளின் தலைவரான மகேந்திர சிங் டிக்கைட், உத்தரப் பிரதேச விவசாயிகளை 1988ஆம் ஆண்டில் அதிக அளவில் அணி திரட்டி டெல்லியை நோக்கிச் சென்று போராட்டம் நடத்தினார். ஆனால், விவசாயிகளுக்கிடையில் சிறிது காலத்திற்குப் பிறகு வேறுபாடுகள் தோன்றின.
குஜராத் எப்போதுமே விவசாயிகளின் மாநிலமாக இருந்து வருகிறது. குஜராத் மாநிலப் பொருளாதாரத்தின் அடித்தளம் விவசாயம். பின்னரே தொழில்கள் அங்கே வந்தன. எனவே, குஜராத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடி மூலம் விவசாயிகளுக்கு புதிய சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளைத் தீர்க்க ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது''.
இவ்வாறு உமா பாரதி தெரிவித்தார்.