

விவசாயிகள் போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லையெனில் அதற்கேற்ப விளைவுகள் இருக்கும் என மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரித்து வருகின்றன.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் கூறியதாவது:
"விவசாயிகள் கடும்குளிரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நீளத்திற்கு விவசாயிகள் குவிந்துள்ளனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஒரு விவேகமான ஒரு அரசாங்கம் தேவை. ஆனால் அது நடக்கவில்லை, எனவே அதற்கான விளைவுகளும் ஏற்படும்.
ராமர் கோயில் கட்ட நிதித் திரட்டுவது தவறானது ஒன்று அல்ல. எந்தவொரு அமைப்பிற்கும் நிதி தேடுவது அவர்களது உரிமை. ஆனால் நான் கேள்விப்பட்டேன், அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியவில்லை, மாநிலங்களின் ஆளுநர்களும் இதில் பங்கேற்கிறார்கள். அந்த செய்தி உண்மை என்றால் அது மிகவும் விசித்திரமானது.
ஓர் ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கான முக்கிய பதவியை வகிப்பவர், அவர் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர். இதில் மக்கள் எதிர் கருத்துக்களைக் கொண்டிருக்கும் இத்தகைய சிக்கல்களிலிருந்து விலகி இருப்பதுதான் ஆளுநர்னர்கள் விவேகமானவர்களாக இருப்பதற்கான அடையாளமாக இருக்கும்.
நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை நாங்கன் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவுரங்காபாத்தை சாம்பாஜிநகர் எனவும் உஸ்மானாபாத்தை தரஷிவ் என்று பெயர் மாற்றம் செய்யப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த பெயர் மாற்றங்களை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அதனால் எங்களிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்ப வில்லை.
இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.