Last Updated : 14 Jan, 2021 12:27 PM

 

Published : 14 Jan 2021 12:27 PM
Last Updated : 14 Jan 2021 12:27 PM

விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து தேசவிரோதியாக சித்தரிக்க முயல்கிறார்கள்: மத்திய அரசு மீது சிவசேனா குற்றச்சாட்டு


வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு விருப்பமில்லை, விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகளாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 8 சுற்றுப்பேச்சு மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் கிட்டவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்காலிகமாக வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த தடை விதி்த்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வேளாண் போராட்டம் குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது:

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்பும் பிடிவாதமாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் பேச்சைக் கூட விவசாயிகள் மதிப்பதில்லை என்று இனிமேல் மத்திய அரசால் சொல்லக்கூடும்.

இப்போது கேள்வி உச்ச நீதிமன்றத்தின் மரியாதை அல்ல, நாட்டின் வேளாண் கொள்கை பற்றித்தான் கேள்வி எழுப்பப்படுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றுதான் விவசாயிகள் குரலாக இருக்கிறது. ஆனால், முடிவு எடுக்க வேண்டியது அரசின்கையில்தான் இருக்கிறது.

ஆனால், போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று மத்திய அரசு அவர்களை அவமானப்படுத்துகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவசாயிகள் போராட்டத்துக்குள் நுழைந்தால்,அதுகூட மத்திய அரசின் தோல்வியாகத்தான் இருக்கும்.

மத்திய அரசுக்கு, விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர விருப்பம் இல்லை.அவர்கள் போராட்டத்தை தேசவிரோதமாக, தேசவிரோதிகளாக மற்ற வண்ணம் பூச முயல்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தையும், அவர்களின் துணிச்சலையும், விடாப்பிடியாக போராடுவதையும், பிரதமர் மோடி வரவேற்க வேண்டும். வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளை பிரதமர் மோடி மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எப்போதும் மோடி பெரிதாக மதிக்கப்படுவார்.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியில்தான் முடிகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து வீடு திரும்பியவுடன், வேளாண் சட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மத்திய அரசு விலக்கி, விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவிடாத வகையில் தடுக்கும்.

விவசாயிகள் மனநிலை என்பது செய் அல்லது செத்துமடி என்ற ரீதியில் இருக்கிறது. போராடும் விவசாயிகளுடன் ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தின் முடிவை ஒருவேளை விவசாயிகள் ஏற்காவிட்டால், லட்சக்கணக்கான விவசாயிகளை துரோகிகள் என மத்தியஅரசு அழைக்குமா.

உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க அமைத்துள்ள சமரசக் குழுவில் இடம் பெற்ற 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள். இதன் காரணமாகத்தான் விவசாயிகள் அந்தக் குழுவை நிராகரிக்கிறார்கள்.

ஜனவரி 26-ம் தேதி குடியுரசு நாள் அன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழையப் போகிறார்கள்.இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்தியாகம் செய்துவிட்டார்கள்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x