

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையளிக்கக் கூடியவை எனக் கூறி ஒரு மனுகூட இதுவரை தாக்கல் செய்யப்படவில்லையே. பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானவை, செல்லத்தக்கது அல்ல எனக் கூறி திமுக எம்.பி. திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏஎஸ். போபன்னா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகாபால் ஆஜரானார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, அட்டர்னி ஜெனரலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பாப்டே கூறுகையில், “வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் வேதனையளிக்கிறது.
இதை மத்திய அரசு கையாளும் விதமும் வருத்தமளிக்கிறது. என்ன மாதிரியான பேச்சுவார்த்தை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே செல்கிறது எனத் தெரியவில்லை. சிறிது காலத்துக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா?
ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர். வயதானவர்கள், பெண்கள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துகிறார்கள். என்ன நடக்கிறது. இதுவரை வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கானவை என ஆதரவாக ஒரு மனுகூட தாக்கல் செய்யப்படவில்லையே.
ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். யாருடைய ரத்தக்கறையும் எங்கள் கரங்களில் படிய விரும்பவில்லை. சிறிது காலத்துக்கு இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கலாம்.
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லாவிட்டால், நாங்கள் தடை விதிக்க வேண்டியது இருக்கும். மத்திய அரசுதான் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள்தான் இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளீர்கள் என்பதால், இதைச் சிறப்பாக அமல்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “இந்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி பாப்டே, “இன்றுக்குள் நீங்கள் ஏதாவது முடிவு எடுக்காவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன.